மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனையொட்டி முதல் நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தைச் சுற்றியுள்ள கம்பத்தடி மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அப்போது சுவாமி சன்னதியிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனியாக வெள்ளி சி்ம்மாசனத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரம் முன்பு வெள்ளி சிம்மாசனத்தில் 10.35 மணியளவில் எழுந்தருளினர். யாகசாலை அமைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.48 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தர்ப்பைப்புல், மலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கொடிமரத்தின் மேலிருந்து மலர்கள் தூவினர்.
இதில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், தீப, தூப ஆராதனைக்குப்பின் மதியம் 12 மணியளவில் கொடிமரம் முன்பிருந்து சுவாமி, அம்மன் புறப்பட்டு, சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து கோயிலுக்குள் மண்டகப்படியில் எழுந்தருளினர். அன்றிரவு கற்பகவிருட்சம் வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மன் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருள்வர். திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர்.
முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் மே 6-ம் தேதி இரவு 7.35 மணியளவில் நடைபெறும். மே 7-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெறும். 10-ம் நாள் மே 8-ம் தேதி காலை 8.35 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். மே 9-ம் தேதி காலை 6.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும். மே 10-ம் தேதி தீர்த்தம் மற்றும் தெய்வேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கோயிலுக்குள் கொடியேற்றம் நிகழ்வை எடுப்பதற்கு பத்திரிகை போட்டோகிராபர்கள் இந்தாண்டு அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘பத்திரிகை போட்டோகிராபர்கள், டிவி வீடியோகிராபர்கள் கோயிலுக்குள் வந்திருந்தால் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும். விஐபிக்கள் தரிசனம் செய்ய முடியாமல் சிரமப்பட்டிருப்பார்கள். தற்போது போட்டோகிராபர்கள் வராததால் அந்த நிலை ஏற்படவில்லை. போட்டோகிராபர்கள் அனுமதிப்பது தொடர்பாக பின்னர் பேசுவோம்’ என்றார்.