சென்னை: தமிழகத்தில் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
முன்னதாக அரசு தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில், “ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது. எனவே, திங்கட்கிழமை (இன்று) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்’ என தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து: முன்னதாக, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், “பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிர்த்து எளிமை, அன்பு, அடக்கம் இவற்றை குணநலன்களாகக்கொள்ள வழிகாட்டிய கருணை வள்ளல் அவர். பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டிய பெருமானார்.
“தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு” என்று உழைப்பை மதித்திடும் உத்தமப் பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவர்.
மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மார்க்கங்களைப் போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறார்கள்.
அத்தகைய நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், முதல்வர் என்ற பொறுப்பிலும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் வாசிக்க > ரம்ஜான் பண்டிகை: தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து