தென்காசி: தென்காசியில் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசியில் உள்ள உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற திருப்பணி வேலைகள் நிறைவடைந்து, நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இக்கோயிலை கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபாட்டுடன் கடந்த 3-ம் தேதி குடமுழுக்கு விழா பூஜைகள் தொடங்கின. 4-ம் தேதி மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 5-ம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை, கடம் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை, பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு, மகா பூர்ணாஹுதி, கடம் எழுந்தருளல் நடைபெற்றது. யாகசாலை பூஜையின்போது சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

தூத்துக்குடி ஆலால சுந்தரலோக சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு செய்தனர். காசி விஸ்வநாதர் கோயில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகளை நடத்தினர்.
விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், எம்.பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார், ஈ.ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் பொன்னி, திருப்பணி நன்கொடையாளர்கள், அறங்காவலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். தென்காசி தெப்பக்குளம் அருகே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.