மதுரை: மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12-ம் தேதி நடைபெறுகிறது.
உலகப் புகழ் பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள். சைவம், வைணவத்தின் இணைப்புத் திருவிழாவாக நடைபெறும் இத்திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை பக்தி பரவசத்துடன் கள்ளழகரை வரவேற்பார்கள். அத்தகைய சிறப்புக்குரிய சித்திரைத் திருவிழா குறித்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.ஆர்.வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் ந.யக்ஞநாராயணன் ஆகியோர் இன்று தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அழகர்கோவிலில் கள்ளழகர் கோயிலில் மே 8-ம் தேதி வியாழக்கிழமை கோயிலில் சுந்தரராஜபெருமாள் சுவாமி புறப்பாடுடன் ஆரம்பமாகிறது. மே09-ம் தேதி 2-ம் நாள் சுவாமி புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து மூன்றாம் நாள் மே 10-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்குமேல் 6.15 மணிக்குள் கோயிலிலிருந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார்.
நான்காம் நாள் மே 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை மாநகரான மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை சூட்டிக்கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார்.
பின்னர் அங்கிருந்து வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரை வாகனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மே 12-ம் தேதி திங்கள்கிழமை சித்திரை மாத பவுர்ணமியன்று அதிகாலை 5.45 மணிக்குமேல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடைபெறும்.அண்ணா நகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு எழுந்தருள்கிறார்.
ஆறாம்நாள் மே 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுதல், பின்னர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.
ஏழாம் நாள் மே 14-ம் தேதி அதிகாலை மோகனாவதாரத்தில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார்.அன்று பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுதல், இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு அலங்காரம் நடைபெறும். எட்டாம் நாள் மே 15-ம் தேதி மதுரையிலிருந்து அழகர்மலைக்கு புறப்படுகிறார்.
ஒன்பதாம் நாள் மே 16-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குமேல் 10.25 மணிக்குள் இருப்பிடம் சென்றடைகிறார்.பத்தாம் நாள் மே 17-ம் தேதி உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வி.ஆர்.வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் ந.யக்ஞநாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.