தேனி: மலையாள புத்தாண்டு தினமான விஷு (சித்திரை 1) அன்று சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு (சுவாமி புனித நீராடல்) திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக ஏப்.1-ம் தேதி கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1, 2, 4, 6, 8 கிராம்களில் டாலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மலையாள வருடப் பிறப்பான விஷு பண்டிகை தினமான ஏப்.14-ம் தேதி முதல் இந்த டாலர்கள் விற்பனைக்கு வருகிறது.
இது குறித்து தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், ”கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை செய்யப்பட்டது. இச்சேவை பின்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் இத்திட்டத்தை தொடர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து 1,2,4,6,8 கிராம்கள் என ஐந்து வகையான டாலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முன்னணி தங்க நகை நிறுவனங்கள் இவற்றை வடிவமைத்துத் தந்துள்ளன.
இதன் தரம் உறுதி செய்யப்பட்டு 916 தரமுத்திரையுடன் இது விற்பனை செய்யப்பட உள்ளது. மலையாள புத்தாண்டான விஷு தினத்தன்று சபரிமலையில் இந்த டாலர்கள் விற்பனை தொடங்க உள்ளது. ஆன்லைன் மற்றும் தேவசம்போர்டு அலுவலகத்திலும் பணம் செலுத்தி இவற்றை வாங்கிக் கொள்ளலாம். சந்நிதானத்தில் பூஜை செய்த பிறகு இந்த டாலர்கள் விற்பனைக்கு அனுப்பப்படும்” என்றார்.
இந்நிலையில், புனித நீராடலுக்காக உற்சவமூர்த்தி பம்பை வர உள்ளார். ஆகவே சன்னிதானத்தில் காலை 8 மணி வரையே தரிசனம் நடைபெறும். மீண்டும் இரவு 8 மணிக்கு தரிசனம் தொடங்கும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.