மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில், நீண்ட காலமாகவே புவியியல் காரணிகள் முக்கிய பங்காற்றி வந்துள்ளன. கள்ளக்குறிச்சியின் கல்வராயன் மலை, நீலகிரியின் குக்கிராமங்கள் மற்றும் தருமபுரி, ஈரோட்டில் வனங்களுக்கு அருகில் வாழும் மாணவர்கள், பள்ளிக்குச் செல்ல பல மைல்கள் பயணிக்க வேண்டியிருந்தது.
மழைக்காலத்தில் பாதைகள் துண்டிக்கப்பட்டு, பள்ளி வருகை குறைவதுடன், இடைநிற்றல் விகிதமும் உயர்வது வாடிக்கையாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநில அரசு ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் ‘தொல்குடி திட்டம்’ மூலம் பள்ளிக்கென 26 தனி வாகனங்களை திருச்சி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு வழங்க பழங்குடியினர் நலத்துறை நடவடிக்கை எடுத்தது.இதனால் 74 உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் 3600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர். கல்வராயன்மலை இன்னாடு கிராமத்தில் இந்த வாகனப் போக்குவரத்து திட்டத்தை ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கியபோது, மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்த தையும், இடைநிற்றல் குறைந்ததையும் கண்டறிய முடிந்தது.

