இளையோரின் நேசன்: ‘சமூகத்தைப் புரட்டிப்போடக்கூடிய சக்திவாய்ந்த கருவி கல்வி’ என்றார் கலாம். இதனை அவர் ஆழமாக நம்பியதால்தான் விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராகப் பல உயரிய பொறுப்புகளை வகித்த பிறகும் தனது இறுதி மூச்சுவரை மாணவர்களைத் தேடிச் சென்று உரையாடினார். இளையோருக்கு வாழ்க்கையின் சாராம்சத்தைப் போதித்து அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதில் நாட்டம் கொண்டிருந்தார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் தாம் பெற்ற படிப்பினையைப் பகிர்ந்தார்.
இதுபோக, உலக மாணவர் நாள் மேலும் பல காரணங்களுக்காகக் கடைப்பிடிக்கப் படுகிறது. எதிர்காலத் தலைவர்களாக, புதிய கண்டறிதல்களை நிகழ்த்துபவர்களாக மாணவர்கள் உருவாக அழைப்புவிடுக்கும் நாள் இது. கல்வி எவ்வாறு ஒருவரின் தலையெழுத்தைத் திருத்தி சிறப்பாக எழுத வல்லது என்பதை உரக்கச் சொல்லும் நாள் இது. ஆண்டுதோறும் இந்நாளுக்கான கருப்பொருள் மற்றும் உபதலைப்புகள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.

