
சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக இன்று (நவ.17) தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

