நடிகர் ரவி மோகன், தான் தயாரிக்கும் படத்துக்கு ‘புரோ கோட்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதை கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்நிலையில் ‘இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ்’ என்ற மதுபான நிறுவனம் ‘புரோ கோட்’ என்ற பெயரை தங்களது வர்த்தக சின்னமாகப் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் ‘புரோ கோட்’ தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
பிரபலமான வணிக நிறுவனப் பெயரைத் திரைப்படத்துக்குப் பயன்படுத்துவது வர்த்தக சின்ன விதிமீறல் என அந்நிறுவனம் வாதிட்டது. இதையடுத்து திரைப்படத்துக்கு ‘புரோ கோட்’ பெயரைப் பயன்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப் பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்து தடையை உறுதி செய்து உத்தரவிட்டது. விசாரணை டிசம்பர் முதல் வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

