
வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான ஃபுட் ஸ்டாம்ப்ஸ் (Food Stamps) என்று சுருக்கமாக அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் (Supplemental Nutrition Assistance Program) முடங்கும் சூழல் ஏற்படும். நவம்பரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நிதியில்லை என்று வேளாண் துறை தெரிவித்துள்ள நிலையில், இதை நம்பியுள்ள 4.2 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த அபாயத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளாத அமெரிக்க அரசு, இப்படியொரு நிலை உருவானால் அதற்கு அமெரிக்க எதிர்க்கட்சிதான் காரணம் என்ற வகையில் ஜனநாயகக் கட்சி மீது பழியைத் தூக்கிப் போட்டுள்ளது. அமெரிக்க வேளாண் துறை செயலர் ப்ரூக் ரோலின்ஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “ஜனநாயகக் கட்சியினர் அந்நியர்களுக்கு ஆதாயமாக இருக்கும் ஹெல்த் கேர் திட்டத்துக்காக அமெரிக்கர்களுக்கு பயனாக இருக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஆபத்தில் கிடத்தியுள்ளனர். வெட்கக்கேடு.” என்று பதிவிட்டுள்ளார்.

