கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என டிரா செய்திருந்தது. இந்தத் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி கைப்பற்றிய 39 விக்கெட்களில் 35-ஐ கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி ஆகியோரை உள்ளடக்கிய சுழல் கூட்டணி வீழ்த்தியிருந்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான நோமன் அலி, சஜித் கான், ஆசீப் அப்ரிடி ஆகியோர் கூட்டாக 27 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தனர். 36 வயதான சைமன் ஹார்மர் முதல்தர கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்திய ஆடுகளங்களுக்கு அவர், ஒன்றும் புதியவர் இல்லை.
கடந்த 2015-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் மொகாலி, நாக்பூர் டெஸ்டில் அவர், விளையாடியிருந்தார். அப்போது சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா ஆகியோரது விக்கெட்களை சைமன் ஹார்மர் வீழ்த்தியிருந்தார். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு அவர், இந்திய மண்ணில் விளையாட உள்ளார். கடந்த மாதம் ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சைமன் ஹார்மர் 8 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

