22-ம் தேதி முதல் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்குகிறது. அதன்பின் மாலையில் யாக சாலை பூஜைகள் நடக்கின்றது. தொடர்ந்து, தினசரி காலை, மாலையில் இருவேளையும் பூஜைகள் நடைபெற்று, 27-ம் தேதி உச்சிக்காலத்துடன் பூர்த்தியாகிறது. மேலும், 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினசரி இரவு மங்களகிரி விமானம், சந்திரபிரபை, ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், மங்களகிரி விமானத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.
விழாவின் பிரதான நாளான 27-ம் தேதி இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு நடக்கிறது. முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்வார். அதனைத் தொடர்ந்து, 28-ம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று, சுவாமி வீதி உலா நடைபெறும். பின்னர், இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாண விருந்து நடைபெறுகிறது.

