பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க டெல்லியில் இருந்த ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா நேற்று நிதிஷ் குமாரைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர், “சில நாட்களில், புதிய அரசாங்கம் அமைக்கப்படும். சரியான நேரத்தில் நீங்கள் விவரங்களை அறிந்து கொள்வீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிக்கையில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்.” என்று கூறினார்.
2020 தேர்தலில் 50-க்கும் குறைவான எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்ததால் குறைவான அமைச்சர்களை பெற்ற ஐக்கிய ஜனதா தளம், இம்முறை அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்டுள்ளது. இதற்கிடையில், எல்ஜேபி கட்சி புதிய அரசாங்கத்தில் சேர ஆவலுடன் இருப்பதாக சிராக் பாஸ்வான் கூறினார். அதே நேரத்தில் எல்ஜேபி துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிகளும் அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

