
திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு உற்சாகமாக தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைந்தொடர்ந்து காலை பல்லக்கு உற்சவத்திலும், இரவு 7 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப் பெருமான் வீதி உலாவும், மறுநாள் 23-ம் தேதி வியாழக்கிழமை இரவு ஆட்டுக்கிடா வாகனம், 24-ம்தேதி வெள்ளிக்கிழமை இரவு புருஷா மிருக வாகனம், 25-ம்தேதி சனிக்கிழமை இரவு பூத வாகனம், 26-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளி அன்ன வாகனத்திலும் தினம் ஒரு சூரபொம்மையுடன் மேளதாளம், வான வேடிக்கைகளுடன் வீதி உலா நடைபெறும்.

