இக்கோயில் கட்டுமானப் பணி கடந்த 2001-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு ரூ.30 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோயில் கட்டுமானத்தின் பெரும் பகுதி நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடத்துக்குள் பணிகளை முடிக்க இஸ்கான் அமைப்பினரால் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை இஸ்கான் கோயிலின் உப தலைவர் மதுகோபால்தாஸ் கூறியதாவது: இக்கட்டிடம் தரைத்தளம், முதல் தளம், 2-ம் தளம் ஆகியவற்றை கொண்டதாகும். 20 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமையும் முதல் தளம், 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், கர்ப்பகிரகம் 2,400 சதுரடி பரப்பளவில் ராதாகிருஷ்ணர், ஜெகந்நாதர், பலராமர், சுபத்ராதேவி ஆகியோர் வீற்றிருக்கும் இடமாகும். மேலும், இங்கு தெப்பக்குளம் அமைக்கப்படுவதோடு, ஸ்தல விருட்சமாக ‘தமால்’ மரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

