
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் ஸ்பின் ஆதரவுப் பிட்சில் ஒரே ஓவர்தான் வீசியிருக்கிறார். பேட்டிங்கில் 3ம் நிலையில் இறங்கி 29 ரன்களை எடுத்து 2ம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஹார்மரின் அட்டகாசமான பந்தில் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார்.
வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிப் பயிற்சியாளரின் தத்துப் பித்து உத்திகளின் பலியாகி விடக்கூடாது என்ற அக்கறையினால் எழும் எச்சரிக்கை உணர்வு அவருக்குத் தேவை. தேவையில்லாமல் 3 இடது கை ஸ்பின்னர்களை அணியில் எடுத்து பவுலிங் ஆல்ரவுண்டர் ஆன வாஷிங்டன் சுந்தரை வெறும் பேட்டராக மட்டுமே கருதி 3ம் நிலையில் இறக்குவதில் என்ன சிக்கல் எனில், கடும் நெருக்கடியில் அவர் இறங்க நேரிடும். அதுவும் இது போன்ற டர்னிங் ட்ராக்கில் அவர் அதீத கவனத்துடன் தான் ஆட முடியுமே தவிர இங்கிலாந்தில் ஆடியது போல் சுதந்திரமாக ஆட முடியாது.

