
சென்னை / திருத்தணி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி சுப்பிரமணியர் கோயிலில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி விழா கடந்த 21-ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் தொடங்கியது.
அக். 22-ம் தேதி முதல் லட்சார்ச்சனை தொடங்கியது. தொடர்ந்து, தினசரி காலை, மாலையில் இருவேளையும் பூஜைகள், சுவாமி வீதி உலாவும் நடந்தது. விழாவின் பிரதான நாளான நேற்று, உச்சி காலத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு அம்பாளிடம் வேல் பெற்று, சூரபத்மனை வதம் செய்ய முருகப் பெருமான் புறப்பட்டார்.

