அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
மேலும், அமெரிக்க விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்1பி விசா கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

