
கல்வி கருவறையிலிருந்தே தொடங்கிவிடுகிறது. கல்லறைவரை அது நீள்கிறது. கருவிலிருக்கும்போது தாயின் இதயத்துடிப்பே இசைத்தட்டாகிறது. இருளையே கரு இருப்பிடமாக்கிக்கொள்கிறது. பிறக்கும்போது உறுத்தும் வெளிச்சத்திற்குப் பழகுவதில் வாழ்க்கை தொடங்குகிறது. உண்பதற்கும் தவழ்வதற்கும் கற்றுக்கொள்வதால் தாக்குப்பிடிக்கும் கலை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. வாழ்வு குறித்த பாடத்தை நாம் பிறப்பிலிருந்தே பெறத் தொடங்குகிறோம். தவழ்ந்த பின்பு மெதுவாக எழுந்து இரண்டு கால்களில் நிற்பது நமக்குள் நடக்கும் பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது.
தொடர்ந்து கற்றல்: கற்றதாலும் கற்றதை ஆவணப்படுத்தியதாலும் மனிதன் மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்டான். அவனுடைய இடைவிடாத கல்வியே முன்னேற்றங் களை எல்லாம் முடுக்கிவிட்டது. தன்னை விட வலிமையானவற்றை எல்லாம் வெற்றிகொண்டு வீறுநடைபோடக் கல்வியே அவனுக்குக் கைகொடுத்தது.

