சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பா.உ.செம்மல், டிஎஸ்பியான சங்கர் கணேஷை கைது செய்ய கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான செம்மலின் உத்தரவு அசாதாரணமானது எனக்கூறி டிஎஸ்பியை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
மேலும், இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான பா.உ.செம்மலை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதியாக இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல சென்னை வணிக நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக பணியாற்றி வரும் தீப்தி அறிவுநிதி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதியான பி.வேல் முருகன், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், அங்கு பணியாற்றிய பூரண ஜெய ஆனந்த் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், அங்கு பணியாற்றிய ஜெ.சந்திரன், சேலம் மேட்டூர் விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், சென்னை குடும்பநல நீதிமன்ற 3-வது கூடுதல் முதன்மை நீதிபதி வி.தேன்மொழி, திருப்பத்தூர் மாவட்ட நீதிபதியாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.