ஓசூர்: பெற்றோரின் அலட்சியம், குடும்ப வறுமை காரணமாக ஓசூரில் புலம்பெயர் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் இக்குழந்தைகளை மீட்டு, கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் நகரான ஓசூரில் 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி தொழிற்சாலைப் பணி, விவசாயக் கூலிப் பணி மற்றும் கைத்தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக உள்ளனர். இதனால், ரயில் நிலையப் பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை அமைத்து குடும்பத்தினருடன் தங்கியுள்ளனர்.
இத்தொழிலாளர்களின் 5 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகள் குடும்ப வறுமையால், அழுக்கடைந்த ஆடைகள், பரட்டைத் தலையுடன் சாலைகளில் சுற்றித் திரிவதோடு, சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில குழந்தைகள் யாசகம் பெறும் கொடுமையும் நடந்து வருவதாக பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூரில் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் பெற்றோரின் பராமரிப்பு இல்லாமல், பள்ளிக்கு செல்லாமல், சாலைகளில் கழிவுப் பொருட்களை சேகரித்து அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் பெற்றோரிடம் கொடுத்து வருகின்றனர். இதனால், புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
சில குழந்தைகள் சின்ன சின்ன திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இச்செயல்களில் ஈடுபடும் குழந்தைகள் வரும் காலங்களில் பெரிய குற்றங்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. எனவே, சாலைகளில் சுற்றும் இக்குழந்தைகளை மீட்டு, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்வி பயில குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, “சாலைகளில் சுற்றும் குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்து விடுவோம். அவர்கள் குழந்தைகள் நல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு செய்து அவர்களின் சொந்த மாநிலத்தில் உள்ள குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்து விடுவர்.
பெற்றோர் இல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விடுவோம். நிரந்தரமாகப் பணி செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளாக இருந்தால் அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.