சென்னை: விருதுநகர், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் ரூ.50 கோடியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்ட 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் இனி பாதுகாப்பான, கவுரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதை அரசு உறுதி செய்யும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 10,469 வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவித்தார்.
அதன்படி, 28 மாவட்டங்களில் உள்ள 69 முகாம்களில் 10,469 புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, ரூ.629 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 3,510 புதிய வீடுகள் ரூ.186 கோடி செலவில் 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் கட்டிமுடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார்.
தொடர்ந்து 2-ம் கட்டமாக, 3,959 புதிய வீடுகள் ரூ. 236 கோடியில் 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, இவற்றில் ஏற்கெனவே 3 மாவட்டங்களில் உள்ள 4 முகாம்களில் கட்டிமுடிக்கப்பட்ட 236 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள 3,723 வீடுகளில் தற்போது விருதுநகர் மாவட்டம் – கண்டியாபுரம், மல்லாங்கிணறு மற்றும் குல்லூர்சந்தை, திருவண்ணாமலை மாவட்டம் – தென்பள்ளிப்பட்டு மற்றும் சொரக்கொளத்தூர், தூத்துக்குடி மாவட்டம் – தாப்பாத்தி மற்றும் மாப்பிள்ளையூரணி, சிவகங்கை மாவட்டம் – சென்னலக்குடி ஆகிய 8 முகாம்களில் ரூ. 44 கோடியே 48 லட்சத்து 65 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 772 புதிய வீடுகளுக்கு ரூ.6 கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் செலவில் அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டு நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, ச.மு.நாசர், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் மா.வள்ளலார், பொதுத்துறை அரசு கூடுதல் செயலர் கி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.