சென்னை: சென்னை ஐஐடி வத்வானி டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ ஆய்வு மையம் சார்பில் ஏஐ ஆளுமை தொடர்பான மாநாடு, கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதுகுறித்து, வத்வானி டேட்டா சயின்ஸ் மையத்தின் பேராசிரியர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். ஏஐ தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி. அதில் கிடைக்கும் தகவல்கள் எப்போதும் சரியாக இருக்கும் என்பது கிடையாது.
இதுகுறித்து, மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும். பெரிய நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டது என்ற தகவலுடன் மக்களுக்கு அளிக்க வேண்டும். அதன் பின்னர், அதனை பயன்படுத்துவர்களுக்கு பிரச்சினை வந்தால் அது அவர்கள் பொறுப்பு.
அவ்வாறு தெரிவிக்காமல் கூறினால் அதில் தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய வழிமுறைகள் இருக்க வேண்டும். அதற்காக ஏஐ தொழில்நுட்பத்தில் விதிகளை கொண்டுவர உள்ளோம்.
இந்தியாவில் இணைய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு சரியான விதிமுறைகள் இல்லாமல் உள்ளன. அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. மேலும், காப்புரிமை சட்டமும் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.