காஞ்சிபுரம்: வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுங்குவார் சத்திரம் மருந்து ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆலை பூட்டப்பட்டிருந்ததால் ஆலைக் கதவில் ஒட்டப்பட்டது.
இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டதோடு, 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு இந்த இருமல் மருந்து தான் காரணம் என்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தங்கள் மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தமிழக அரசை வலியுறுத்தின.
இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 3-ம் தேதி, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மருந்து உற்பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆலை வளாகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்கள், தயாரிக்கப்பட்ட மருந்தின் மாதிரிகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்த முக்கிய விவகாரம் குறித்து ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கோர, காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மணிமேகலை நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் இந்த ஆலைக்குச் சென்றபோது ஆலை பூட்டப்படிருந்ததால், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கோரும் நோட்டீஸை ஆலையின் வாயிலில் ஒட்டினார்.
தயாரிக்கப்பட்ட மருந்தில் ஏதேனும் தரக் குறைபாடு (Sub-standard quality) இருந்ததா அல்லது மருந்து தயாரிப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பாகவும், மருந்து தயாரிப்பின்போது பின்பற்றப்பட்ட தரக் கட்டுப்பாடு நடைமுறைகள், மூலப்பொருள்கள் கொள்முதல் ஆவணங்கள், சோதனை அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்துக் கேட்கப்பட்ட விளக்கத்தை திருப்திகரமாக அளிக்கத் தவறினால், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி, ஆலையின் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.