கும்பகோணம்: கரூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விஸ்வ இந்து பரிஷத் நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, வரும் 25, 26, 27-ம் தேதிகளில் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்த போது செல்லாத முதல்வர் ஸ்டாலின், கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் என்றால், அதற்கு காரணம் அரசியல்தான். கரூர் மாவட்ட எஸ்.பி. திமுககாரர்போல செயல்படுகிறார். கரூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.யை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
அதேபோல, கரூர் மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு கடமை தவறியதால் 41 பேர் உயிரிழந்தனர். நிர்வாகத் தோல்வியை திசை திருப்பவே, தமிழக முதல்வர் கரூர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துள்ளார். விபத்து நடந்த அன்று விஜய் கரூரிலேயே தங்கி இருந்தால், தமிழக முதல்வர் அங்கு செல்ல துணிச்சல் இருந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.