மத்திய அமைச்சராக இருந்தபோது 2008-ல் நான் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் எங்கே? என திமுகவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் பாமக சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின்போது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக 2008-ல் இருந்தபோது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினேன். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. நான் அடுத்தாண்டு அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டேன். அடுத்த 3 ஆண்டுகள் திமுகதான் ஆட்சியிலிருந்தது. திமுக எய்ம்ஸ் திட்டத்தை கொண்டுவரவில்லை. திமுக கொண்டு வந்திருந்தால் இந்தியாவில் முன்மாதிரியாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருக்கும்.
மதுரையில் அப்போதே கட்டி முடித்திருக்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனையை வரவிடாமல் தடுத்ததற்கு காரணம் திமுக. நான் அடிக்கல் நாட்டிய செங்கல்லை தொட்டுக்கூட பார்க்கவில்லை. இதன் மூலம் தமிழக மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்துள்ளனர். அதற்குப்பின்னர் பிரதமர் அடிக்கல் நாட்டிய செங்கல்லை காட்டி திமுக அரசியல் செய்துவருகின்றனர். திமுக ஆட்சியில் நான் அடிக்கல் நாட்டிய கல் எங்கே? திமுக யாரை ஏமாற்றுகிறது. எதற்காக இந்த நாடகம் நடத்துகிறீர்கள்.
தற்போது தமிழகத்தில் 1968 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்ற துயரமான செய்தி வெளிவந்துள்ளது. இதைப்பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை, யாரும் இதைப்பற்றி விவாதிக்கவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் 505-ல் 66 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றியுள்ளனர். இதில் திமுக 100-க்கு 13 மார்க் தான் எடுத்துள்ளது. 35 மார்க் எடுத்தால்தான் பாஸ்மார்க். திமுக பெயிலாகியுள்ளது. பெயில் மார்க் எடுத்த திமுக ஆட்சிக்கு வர தகுதியிருக்கிறதா? பெயில் மார்க் எடுத்த ஸ்டாலினை ஆட்சி செய்ய விடவே கூடாது. தமிழக மக்களே சிந்தித்து பாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.