சென்னை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில், தமிழக அரசு ஓய்வூதியக் குழுவை அமைத்தது. அக்குழு செப். 30-ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அத்தேதியில் இடைக்கால அறிக்கையையே சமர்ப்பித்தது.
இந்நிலையில், ஓய்வூதியக் குழு அளித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைமைச் செயலக ஊழியர்கள் அக்.6-ம் தேதி அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவர் என்று தலைமைச் செயலக சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் நேற்று ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதில், அனைத்து வகை அலுவலர்கள், பணியாளர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் தெரிவித்தார்.