சென்னை: தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்னிட்டு, கடலோர காவல்படை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடுக்கடலில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, மாசு தடுப்பு ஒத்திகை சென்னை அருகே சுமார் 20 கிமீ தொலைவில் கடல் பகுதியில் கடலோர காவல்படை வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டால், கடலோர காவல் படை கப்பல்கள் விரைந்து சென்று தீயை அணைப்பது, அதிலுள்ள பணியாளர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பது, கடலில் தத்தளிக்கும் பணியாளர்களுக்கு விமானம் மூலமாக மிதவை உபகரணங்களை போடுவது, இரவு நேரங்களில் பிரத்தியேக ஒளி விளக்கை வானில் ஏவி, பிறர் உதவியை கோருவது, கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், டார்னியர் விமானம் மூலமாக கண்டறிவது, சிறப்பு மாசு தடுப்பு கப்பல்கள் மூலம் மிதவைகள் மூலமாக கடலில் எண்ணெய் பரவாமல் தடுப்பது, அவற்றை ஸ்கிம்மர்கள் மூலமாக உறிஞ்சுவது, கடலில் தத்தளிப்பவரை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் மிதவையை கொண்டு சென்று மீட்பது உள்ளிட்ட ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், இந்திய கடலோர காவல்படை தலைவர் பரமேஷ் சிவமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடலோர காவல்படையில் தற்போது 154 கப்பல்கள், 78 விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளன. இப்படை, எண்ணெய் கசிவை எதிர்கொள்வதில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. உலக அளவில் கடலோர மாசு தடுப்பு பணிகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், உத்திகள் இந்திய கடலோர காவல்படையில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஒத்திகையில் முதன்முறையாக ட்ரோனை பயன்படுத்தி, கடலில் தத்தளிப்போருக்கு மிதவை உபகரணத்தை கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம். கடலோர பகுதிகளில் மீட்பு, மாசு தடுப்பு பணிகளில் ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அப்போது, கடலோர காவல்படை ஏடிஜிபிடோனி மைக்கேல், கிழக்கு பிராந்திய கடலோர காவல்படை தலைவர் டட்விந்தர் சிங் சைனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.