சுற்றுச்சூழல் விதிமீறல் காரணமாக கன்னட பிக்பாஸ் சீசன் 12 வீடு அமைக்கப்பட்டிருந்த செட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கலர்ஸ் கன்னடா தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ கன்னடம் சீசன் 12 ஒளிபரப்பாகி வருகிறது. இதனை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான செட் பிடாடி தொழில்துறை பகுதியில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோஸ் அண்ட் அட்வென்ச்சர்ஸில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அண்மையில் இந்த தளத்தில் கழிவு நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது செட் அமைக்கப்பட்டுள்ள பகுதியின் சுற்றுப்புறத்திலேயே கழிவுநீர் வெளியேற்றப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே அமைப்பினர் ஸ்டுடியோவுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கழிவுநீர் பிரச்சினைகளைத் தவிர, பிளாஸ்டிக் கப் மற்றும் காகிதத் தட்டுகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் முறையாக பரமாரிக்கப்படவில்லை அல்லது ஆவணப்படுத்தப்படவில்லை என்பதை கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்தது. கழிவுகளை நிர்வகிப்பதற்கு அல்லது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதற்கு தெளிவான செயல்முறை எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சுற்றுச்சூழல் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி பிக்பாஸ் செட் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அனைத்து விதமான படப்பிடிப்புகளை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. உடனடியாக பிக்பாஸ் செட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.