சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பங்கேற்று சிறப்புரை உரையாற்றினார். அப்போது, சனாதனம் குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், ‘கமல்ஹாசன் சங்கை அறுத்து விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இது தொடர்பாக ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி ரவிச்சந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பால்கனகராஜ் ஆஜராகி, எந்த வித உள்நோக்கத்தோடும் அவ்வாறு பேசவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். காவல்துறை தரப்பில், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளதால், ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, துணை நடிகர் டி.ரவிசந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.