புதுடெல்லி: ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 மிகப்பெரிய ரயில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான நான்கு ரயில்வே திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவின் வார்தா – பூஷாவல் இடையேயான 314 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3-வது மற்றும் 4-வது ரயில் பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிராவின் கோண்டியா மற்றும் சத்தீஸ்கரின் டோன்கர்கர் இடையேயான 84 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது பாதை அமைப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், குஜராத்தின் வதோதரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ரட்ளம் இடையேயான 259 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3-வது மற்றும் 4-வது பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதோடு, மத்தியப் பிரதேசத்தின் இடார்சி – போபால் – பினா இடையேயான 237 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது பாதை அமைக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நான்கு திட்டங்களின் மூலம், இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 894 கிலோமீட்டர் அதிகரிக்கும். ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் 3,633 கிராமங்களின் போக்குவரத்து மேம்படுத்தப்படும். சுமார் 85.84 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட பகுதிகளில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் அம்மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சாஞ்சி, சத்பூரா புலிகள் காப்பகம், பீம்பேட்கா பாறை, ஹசாரா அருவி, நவேகான் தேசியப் பூங்கா போன்ற முக்கிய இடங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படும். நிலக்கரி, சிமெண்ட், உணவு தானியம், இரும்பு போன்ற பொருட்களை அனுப்புவதற்கான முக்கிய வழித்தடமாக இது உள்ளதால், இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 78 மில்லியன் டன் சரக்குகளை அனுப்ப முடியும் என அரசு தெரிவித்துள்ளது.