சண்டிகர்: ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள தனது செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், இன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக சண்டிகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் கன்வர்தீப் கவுர் கூறுகையில், “இன்று மதியம் 1.30 மணியளவில், செக்டார் 11 காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
செக்டார் 11-இன் காவல் நிலைய அதிகாரி மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தற்கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு அல்லது தடயங்கள் எதுவும் கிடைக்குமா என மத்திய தடய அறிவியல் ஆய்வகக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து தீவிர விசாரணையும் நடந்து வருகிறது” என்று அவர் கூறினார்.
2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான புரன் குமார், இந்திய காவல் சேவை பணியில் உயர்ந்த பதவியான ஏடிஜிபியாக இருந்தார். அவர் கடந்த செப்டம்பர் 29 அன்று ரோஹ்தக்கின் சுனாரியாவில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் (PTC) பணியமர்த்தப்பட்டார். புரன் குமாரின் மனைவி அமன் பி குமார் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். அவர் தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள ஹரியானா முதல்வரின் குழுவில் இடம்பெற்று பயணத்தில் உள்ளார். அவர் நாளை மாலை இந்தியா திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |