விழுப்புரம்: கரூர் விபத்தில் ஆட்சியர் மற்றும் எஸ்பி மீதும் தவறு உள்ளது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினார்.
பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் வாக்கு திருட்டில் ஈடுபட்ட பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் இன்று (அக்.7) கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்கு திருட்டில் பிரதமர் மோடி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பிஹார் மாநிலத்தில் 55 லட்சம் பேருக்கான வாக்குரிமையை தேர்தல் ஆணையம் பறித்துள்ளது.
வாக்கு திருட்டு என்பது சர்வதிகார நாட்டில் நடைபெறலாம். ஜனநாயக நாட்டில் எப்படி நடைபெற முடியும்?. வாக்கு திருட்டு தொடர்பான கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் இல்லை. நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலின மற்றும் முஸ்லிம்களாக உள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற ஓரே காரணத்துக்காக நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள், ராகுல் காந்தியுடன் இணைந்து போராடுகின்றனர். இந்தியாவின் அடையாளமாக இண்டியா கூட்டணி தலைவர்கள் உள்ளனர். மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் ஓரே வரி, சீரான வரி, குறைந்த வரி என கூறி ஜிஎஸ்டி கொண்டு வர காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தபோது, பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மக்களவையில் தோல்வி அடையும் என்பதால், சட்ட முன் வடிவு திரும்பப் பெறப்பட்டது. பின்னர், ஜிஎஸ்டியை பாஜக கொண்டு வந்தபோது, காங்கிரஸ் எதிர்த்தது. 4 முனை வரியை ஒன்று அல்லது 2-ஆக மாற்ற வலியுறுத்தினோம்.
ஆனால், 4 முனை வரியால் ரூ.55 லட்சம் கோடியை கடந்த 9 ஆண்டுகளாக வசூல் செய்துவிட்டு, தேர்தல் வருகிறது என்பதால், 2 முனை வரியாக மாற்றம் செய்து, ரூ.இரண்டரை லட்சம் கோடி தீபாவளி பரிசு என பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் கூறுகின்றனர். மக்களை கசக்கி பிழிந்து வரியை வசூல் செய்துள்ளனர். இப்போது அரசியல் நோக்கத்துக்காக ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனர்.
“விஜய்யை கைது செய்வது…” காங்கிரஸ் எப்போதும் சுய மரியாதையுடன்தான் இருக்கும். பிற கட்சிக்கு புகழ்பாடாது. கரூர் விபத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு போடுவது தேவையில்லாதது. நான்குபுறங்களிலும் தவறு நடைபெற்றுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். எனவே, விஜய்யை கைது செய்வது, மோசமான பின் விளைவை ஏற்படுத்தும், அது தேவை இல்லாதது. கைது செய்யும் நிலைக்கு முதல்வர் செல்லமாட்டார். அதிக கூட்டம் கூடும் என தெரிந்தும், இடத்தை ஆட்சியர், எஸ்பி ஆகியோர் ஏன்? ஒதுக்கினார்கள்.
அவர்கள் மீதும் தவறு உள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் என்பதால், விஜய் கட்சியினர் கேட்டு கொண்டிருந்தாலும், அதிகாரிகள் ஒதுக்கி இருக்கக் கூடாது. கரூர் விபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இல்லை. தாமதமாக வந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என கூறுவதை ஏற்க முடியாது. அதிக கூட்டமே விபத்துக்கு காரணம். கூட்டத்தை கட்டுப்படுத்த விஜய் கட்சியினருக்கும் தெரியவில்லை, காவல்துறைக்கும் தெரியவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் காலணி வீசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் கோபப்பட்டிருப்பார் என்று நினைத்தோம். ஆனால், நெருக்கடியான நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் உள்ளார். சென்னையில் விஜய் வழக்கை விசாரித்த நீதிபதி, அரசியல்வாதியை போன்று பேசி இருக்கிறார்.
தீர்ப்பை விமர்சிக்கவில்லை. ஆனால், சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தீர்ப்பை மட்டும் வழங்காமல், கட்சி தலைவர் போல் பேசி இருக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்-ஐ பார்த்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்து கொள்ளலாம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கடந்தமுறை போட்டியிட்ட தொகுதிகளைவிட, கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு மேலும் ஆட்சியிலும் பங்களிக்கவும் வலியுறுத்துவோம். திமுக கூட்டணி என்பது கொள்கை ரீதியான கூட்டணி. வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.