கோவை: தமிழக – கேரள எல்லைப் பகுதியில் படுகாயமடைந்த காட்டு யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கேரள மாநில அட்டப்பாடி அருகே பவானி மற்றும் சிறுவாணி நதிகள் சங்கமிக்கும் கூடப்பட்டி அருகே கடந்த சில நாட்களாக காயங்களுடன் காட்டு யானை தண்ணீரில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இரு மாநில எல்லைப் பகுதி என்பதால் வனத்துறையினர் ஒருங்கிணைந்து யானைக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
தொடர்ந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த யானையை தமிழக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கோவை வனக்கோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபனாரி காப்புக்காட்டில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தொடர்ந்து இன்று மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள ஆயத்த பணிகள் நடைபெற்றது.