சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால் நிதி நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.என். எஸ்.பிரசாத் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் நல திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற நிதியை பெற்றுக் கொண்டு, திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாமல் நிர்வாக சீர்கேடுகளுக்கு இலக்கணமாக திமுக அரசு விளங்குகிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்தத் திட்டத்தில், தாமதப்படுத்தி பணிகள் செய்யப்பட்டால், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும்படி மத்திய பாஜக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு போதிய கவனம் செலுத்தாவிட்டால் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி நிறுத்தப்பட்டு தமிழக மக்கள் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகும். எனவே, குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு குடிநீர் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசு யாரையும் கன்ட்ரோல் செய்து வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. தமிழக முதல்வர் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல், தொடர்ந்து மத்திய அரசை குறை சொல்வதும் பிரதமர் மோடியை விமர்சித்து அரசியல் செய்வதும் தான் முதல்வர் பணி என்ற குறிக்கோளில் செயல்படுவது தமிழகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.