கரூர்: கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (அக்.6ம் தேதி) காலை 6 மணி முதல் பேருந்துகள் சேவை தொடங்கியது.
கரூர் – கோவை சாலை மற்றும் மேற்கு பிரதட்சணம் சாலை சந்திப்பில் முத்து குமாரசாமி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. ஏ கிரேடு அந்தஸ்து கொண்ட இப்பேருந்து நிலையம் 1987ம் ஆண்டு நவம்.23ம் தேதி திறக்கப்பட்டது.
இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்த முடியும். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் 2002-ம் ஆண்டு முதல் புதிய பேருந்து நிலைய கோரிக்கை எழுந்து வந்தது. இதற்காக சுக்காலியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.
கடந்த 2013ம் ஆண்டு கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலைய அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் வழக்குகளால் பணிகள் தொடங்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் திறப்பு: ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் 12.14 ஏக்கரில் ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கின. மீண்டும் வழக்குகள் காரணமாக பணிகள் முடங்கின. அதன் பிறகு வழக்குகள் முடிவடைந்த நிலையில் பேருந்து நிலையப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஜூலை 9ம் தேதி புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடுதல் உள்ளிட்ட பணிகளால் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு 2 மாதங்களுக்கு மேலான நிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் மாநகராட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் செப்.20ம் தேதி நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அனைத்து தமிழக அரசுப் போக்கு வரத்துக் கழக கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் கோட்டங்கள் மற்றும் கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மண்டலங்கள் அலுவலர்களுக்கு செப்.30ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேருந்து சேவை தொடக்கம்: கரூர் மாவட்டம் திருமாநிலையூர் முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (அக்.6ம் தேதி) காலை 6 மணி முதல் பேருந்துகள் சேவை தொடங்கியது. இதனையொட்டி கரூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கரூர் மண்டல நேர காப்பாளர் அலுவலகத்தில் பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஆணையர் கே.எம்.சுதா, கரூர் மண்டல பொது மேலாளர் (பொ) டி.சதீஷ்குமார், உதவி பொறியாளர் (போக்குவரத்து) முருகானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். புதிய பேருந்து நிலையத்தில் உணவு விடுதி, தேநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தின் வெளியே ஆட்டோ ஸ்டாண்ட் செயல்படுகிறது.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன. வெளியூர்களில் இருந்து புறநகர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தன. துணை மேயர் ப. சரவணன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகள் தொடங்கியதை பார்வையிட்டார்.
பேருந்து வழித் தடங்கள்: கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தாராபுரம், பொள்ளாச்சி மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் முத்துகுமார சாமி பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்து வந்த வழித் தடத்திலேயே திரும்ப செல்ல வேண்டும்.
மதுரை, திண்டுக்கல், பழநி மார்க்கமாக வரும் பேருந்துகள் சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து மீண்டும் அதே வழியாக திரும்ப வேண்டும். திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் (குஜிலியம்பாறை) மார்க்கமாக வரும் பேருந்துகள் திருமாநிலையூர் வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்து, அதே வழியாக திரும்ப வேண்டும்.
நகரப் பேருந்துகள் முத்துகுமார சாமி பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும். மேலும் பொதுமக்கள் வசதிக்காக முத்து குமாரசாமி பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. புதிய பேருந்து நிலையம் செயல்படுவது தொடர்பான அறிவிப்பு பதாகைகள் கரூர் மாநகராட்சி சார்பில் முத்துகுமார சாமி பேருந்து நிலையம், லைட்ஹவுஸ் முனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.