தேசத்தின் இளம் வயது பில்லியனர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார் ‘பெர்ப்ளெக்சிட்டி’யின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீநிவாஸ். 31 வயதான அவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி. டெக் உலகின் ரியல் கேம்சேஞ்சரான அவரின் வெற்றிக் கதையை பார்ப்போம்.
சென்னையில் பிறந்தவர்: கடந்த 1994-ல் ஜூன் 7-ம் தேதி அன்று சென்னையில் பிறந்தார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். கேட்ஜெட்கள், கோடிங் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகள் என சிறுவயது முதலே அதிக ஆர்வம் கொண்ட பிள்ளையாக வளர்த்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ‘மெட்ராஸ் ஐஐடி’-யில் மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்தார். அப்போதே தனது ஜூனியர்களுக்கு தான் கற்றதை பகிரும் பண்பு கொண்டவராக இருந்துள்ளார்.
பின்னர் அமெரிக்காவில் உள்ள பெர்கலியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (யுசி பெர்கலி) 2021-ல் கம்யூட்டர் சயின்ஸில் முனைவர் பட்டம் பெற்றார். செயற்கை நுண்ணறிவில் புலமை பெற்றவர்.
டெக் நிறுவனங்களில் பணி உலா: இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனத்தில் பயின்றவரான அரவிந்த் ஸ்ரீநிவாஸுக்கு டெக் நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்தன. அதை இறுகப்பற்றுறிக் கொண்டார். உலகின் முன்னணி டெக் நிறுவனங்களின் ஏஐ லேப்களில் உலா போவது போல பணி செய்தார். ஓபன் ஏஐ, லண்டனில் உள்ள டீப்மைண்ட், மீண்டும் ஓபன் ஏஐ என பணி செய்தவர். இதில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் DALL E2 ப்ராஜெக்ட்டில் முக்கிய அங்கம் வகித்தவர். டெக்ஸ்ட் மூலம் படங்களை ஜெனரேட் செய்யும் அம்சத்தை DALL E2 கொண்டுள்ளது. ஜெனரேட்டிவ் ஏஐ-யில் புலமை பெற்றவர்.
பெர்ப்ளெக்சிட்டி ஏஐ இணை நிறுவனர்: ஓபன் ஏஐ, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய நிலையில் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தை 2022 டிசம்பரில் டெனிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ மற்றும் ஆண்டி கோவின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து அரவிந்த் ஸ்ரீனிவாஸ் நிறுவினார். இவர்கள் எல்லோரும் பொறியாளர்கள். அதுவும் ஏஐ, மெஷின் லேர்னிங் மற்றும் பேக்-எண்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்டவற்றில் வல்லவர்கள். அந்த வகையில் மற்ற ஏஐ நிறுவனங்களில் இருந்து சற்று வித்தியாசமான பயன்பாட்டு அனுபவத்தை பெர்ப்ளெக்சிட்டி வழங்கியது.
இது ஏஐ ஆற்றல் பெற்ற தேடு பொறி ஆகும். உரையாடல் பாணியிலான பதில்களை பெர்ப்ளெக்சிட்டி பயனர்களுக்கு வழங்கி வருகிறது. பயனர்களின் தேடலை வெறும் லிஸ்டிங் பாணியில் இல்லாமல் ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட வகையில் நேரடி பதில்கள் இதில் கிடைக்கிறது. அதுதான் இதன் சிறப்பு. இதை கட்டணமின்றி பயனர்கள் பயன்படுத்தலாம்.
பெர்ப்ளெக்சிட்டி புரோவை பயன்படுத்த சந்தா செலுத்த வேண்டி உள்ளது. இருந்தாலும் கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது மொபைல், பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் பயனர்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி புரோ ஏஐ பயன்பாட்டை ஓராண்டுக்கு கட்டணமின்றி வழங்குவதாக அறிவித்தது.
பெர்ப்ளெக்சிட்டியின் வெப்சைட்டை சுமார் 120 மில்லியன் பயனர்கள் மாதந்தோறும் பயன்படுத்தி வருவதாக தகவல். இந்த நிறுவனத்தின் மதிப்பு இப்போது சுமார் 18 பில்லியன் டாலர்கள். இந்த நிறுவனத்தின் Comet ஏஐ குறித்த டாக் இப்போது அதிகரித்துள்ளது. உலக அளவில் இது பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் என சொல்லப்படுகிறது.
இந்த நிறுவனத்தை ஆப்பிள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டின. இருப்பினும் அந்த ஆஃபரை அரவிந்த் தவிர்த்து விட்டார். தங்களது நிறுவனம் சுயாதீனமாக இயங்குவதை விரும்புவதாகவும், 2028-க்கு இராகு ஐபிஓ-வை வெளியிடும் திட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
டைம் இதழில் இடம் பிடித்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்: 2024-ல் டைம் இதழின் ‘ஏஐ’ நுட்பத்தின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களில் ஒருவராக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இடம்பெற்றார்.
இந்தியாவின் இளம் வயது பில்லியனர் என அறியப்பட்டாலும் அவரது வாழ்க்கை முறை மற்ற பில்லியனர்களை போல் இல்லாமல் சற்று மாறுபட்டுள்ளது. சிலிகான் வேலி மற்றும் சென்னையில் தனது நேரத்தை சரி பாதியாக பிரித்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். கார், இருசக்கர வாகன கலெக்ஷன் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர்.
தனது தாய்நாட்டில் உள்ள சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ப தனது நிறுவனத்தை கட்டமைக்கும் திட்டத்தை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கொண்டுள்ளார். அந்த வகையில் பெங்களூரு அல்லது ஹைதராபாத்தில் இன்ஜினியரிங் ஹப்பை நிறுவும் திட்டத்தை கொண்டுள்ளார். மேலும், இந்திய ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் திட்டமும் அவரிடம் இருப்பதாகவும் தகவல். இப்போது உலக அளவில் ஏஐ கவனம் பெற்று வருகிறது. அதில் தேர்ந்த புலமை பெற்ற 31 வயது அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இன்னும் எட்ட உள்ள உச்சத்தின் தொடக்கப்புள்ளியாக இது அமைந்துள்ளது.