கோவை: தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருகிறது என கூறுவது அபத்தம் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து உட்கொண்ட 11 குழந்தைகள் உயிரிழந்தது மிகவும் வேதனைக்கு உரியது. இது குறித்து ராஜஸ்தான் மற்றும் தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு காஞ்சிபுரத்துக்கு வருகை தந்துள்ளது. மருந்து கெட்டுப் போகவில்லை, தேவையில்லாத பொருளை உள்ளே கலந்துள்ளதால் விஷமாக மாறி உள்ளது. விசாரணை முடிவில்தான் உண்மை காரணம் தெரியவரும்.
தமிழக ஆளுநர் கேட்கக் கூடிய கேள்விகள் சரியானது. தமிழ்நாடு யாருக்கு எதிராக போராடும் என்றுதான் அவர் கேட்டுள்ளார். திமுகவினர் வேண்டும் என்றே மக்களை தூண்டி விட்டு மக்களிடத்தில் போராட்டத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலையே இல்லை. தமிழக முதல்வர், ஆளுநரை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல.
கரூர் விவகாரத்தை பொறுத்தவரை விஜய் மீது வழக்குப் பதிவு செய்து முதல் குற்றவாளி என்றால் வழக்கு நிற்காது. அல்லு அர்ஜூன் சம்பவத்தை உதாரணமாக எடுத்து கொள்ளலாம். அரசியல் ஆசைக்காக கைது செய்யலாம், ஓர் இரவு சிறையில் வைக்கலாம். மறுநாள் வெளியே வந்து விடுவார்கள். கரூர் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய்யை குற்றவாளியாக மாற்ற நினைத்தால், அது முடியவே முடியாது. அரசியலுக்காக சிலர் இதை பேசிக் கொண்டுள்ளனர்.
திருமாவளவன் கட்சியில் இருந்து திரளானோர் வெளியேறுவதை கண்கூடாக பார்க்கிறார். அந்த எரிச்சலில்தான் திடீரென்று விஜய், மத்திய அரசு குறித்து பேசிக் கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியால் நசுக்கப்படும்போது நாங்கள் நிச்சயம் எங்களுடைய கருத்துகளை பதிவு செய்வோம்.
எப்ஐஆர் மீதே அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தக் கட்சியில் இருக்கக் கூடிய ஒருவர் ‘ஜென் ஸீ’ புரட்சி குறித்து பேசுகிறார். அவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகத்துக்கு பாஜக அடைக்கலம் கொடுக்கிறார்கள் என திமுக எப்படி கூற உரிமை உள்ளது. தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருகிறது என கூறுவது அபத்தம்.
பாஜக தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள். நாம் ஒரு வித்தியாசமான கட்சியை சேர்ந்தவர்கள். கோவை சம்பவம் குறித்து என் கவனத்துக்கு கொண்டு வந்த ஊடக நண்பர்களுக்கு நன்றி. சம்பந்தப்பட்ட மூன்று பேரில் ஒருவர் கட்சியில் உள்ளார். அவரை நான் இதுவரை சந்தித்தது கூட இல்லை. பாதிக்கப்பட்ட நபருக்கு மன உளைச்சல் ஆக இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் காவல் துறை யினர் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்ட அவிநாசி சாலையில் திறக்கப்பட உள்ள மேம்பாலம். தமிழ்நாட்டில் பெரிய பாலம் தென்னிந்தியாவில் 3-வது பெரிய பாலம். போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். கும்பமேளாவில் நடந்த துயரம் போன்ற வட மாநில சம்பவங்களுக்கு கனிமொழி போன்ற எம்.பி-க்கள் செல்லவில்லையா? உங்கள் கூட்டணியில் உள்ள ராகுல் காந்திக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்றதை ஏன் ஸ்டாலின் தவறு என கூறவில்லை.
அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி. அவரின் தலைமையில் சிறப்பு புனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் வந்தார் பார்த்தார், பேசினோம். இதில் விமர்சனங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. டிடிவி என் நடவடிக்கை குறித்தும் விமர்சித்துள்ளார். அது அவருடைய கருத்தாக நான் பார்க்கிறேன். எந்த தவறும் இல்லை.
பாஜகவுக்குள் எது செய்தாலும் தனிப்பட்ட முறையில் செய்ய முடியாது, அனைத்தும் கலந்து பேசியே முடிவு செய்யப்படும். நயினார் நாகேந்திரன் யாருக்கு எதிராகவும் எதுவும் பேசவில்லை. எங்களுக்கு எதிரி திராவிட முன்னேற்றக் கழகம்தான். அரசியலில் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். ஆனால் இதெல்லாம் சரி செய்து முன்னே எடுத்துச் செல்வோம். எங்களுடைய கூட்டணிக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை .எல்லோருக்குமே திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான் முக்கிய நோக்கமாக உள்ளது” என்று அண்ணாமலை கூறினார்.