திருச்சி: பாஜகவின் அரசியல் உள்நோக்கத்துக்கு தவெக தலைவர் விஜய் பலியாகிவிடக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
திருச்சியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அக்.11-ம் தேதி தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க உள்ளோம். கரூர் சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை அரசியல் ஆதாயம் கருதி திசை திருப்ப முயற்சிக்கின்றன. தமிழக அரசியலுக்கு இது உகந்ததல்ல. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டுள்ளார்.
தமிழக ஆளுநர் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட பிறகும் கூட மீண்டும் அரசியல்வாதி போல நடந்து கொள்கிறார். பாஜகவை சேர்ந்தவர் போல பேசியிருப்பது அவருடைய அதிகார வரம்புகளை மீறிய செயலாகும்.
விஜய் மீது எங்களுக்கு தனிப்பட்ட வன்மம், காழ்ப்புணர்ச்சி இல்லை. அவரை கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. ஆனால், அவர் நடந்த சம்பவத்துக்காக வருந்தி இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். அரசியல் ஆதாயம் கருதி ஏமாற்றி இருக்கிறார் என்பதைதான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிய ரூ.10 லட்சம் போதாது. கூடுதலாக நிதி வழங்க வேண்டும். வாய்ப்பு உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க முன்வர வேண்டும்.
விஜய் திமுகவை பலவீனப்படுத்த பயன்படுவார் என்று பாஜகவினர் நம்புகிறார்கள். அந்த அடிப்படையில் தன்னுடைய கொள்கை எதிரி என்று விஜய் பாஜகவை விமர்சித்தாலும், அவருக்கு வலிந்து ஆதரவு தருகிறார்கள். அவர்களுடைய நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அதற்கு விஜய் பலியாகி விடக்கூடாது. தேர்தலுக்கு முன்னதாக டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து முதல்வர் ஒரு முடிவு எடுக்க வேண்டும்” என்று திருமாவளவன் கூறினார்.