அடுத்த சில மாதங்களுக்கு அனல் பறக்கும் தேர்தல் அரசியல் நம்மை தகிக்க வைக்கப் போகிறது. இந்த தகிப்பில் கட்சிகளில் நடக்கும் உள்குத்து விவகாரங்களையும் கொஞ்சம் தெறிக்க விடுவோமா? சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் தொடங்கிய புதிய கட்சியின் தேர்தல் பயணம், கரூர் சம்பவத்தால் சமூக வலைதளங்களுக்குள் மட்டும் சுருங்கிக் கிடக்கிறது. ஆனாலும், பொதுவெளியில் அந்தக் கட்சிதான் பேசுபொருளாகிப் போனது.
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல, இப்போது ஏற்பட்டுள்ள இக்கட்டில் இருந்து எப்படி மீள்வது என்பதில்தான் புதிய கட்சியி்ன் தலைவர் தீவிரம் காட்டுகிறாராம். கரூர் சம்பவத்தை வைத்து புதியவரை தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என ஆளும் தேசிய கட்சி வலை விரித்துக் கொண்டிருக்கிறது. கொள்கை எதிரி என அடையாளப்படுத்திவிட்டு, அவர்களோடு கைகோர்த்தால் சரிப்பட்டு வராது என நினைக்கிறாராம் புதிய தலைவர்.
அவரது மனநிலையை புரிந்துகொண்ட ஆண்ட தேசிய கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலர், தற்போதைய கூட்டணியை விட்டுவிலகி, புது கூட்டணி அமைக்கலாம் என மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்கிறார்களாம். அறுபதுக்கு குறையாமல் சீட், துணை முதல்வர், அமைச்சரவையில் இடம் என புதிய கட்சியிடம் நமக்கு நிறைய ஆபர் இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டால் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தலாம் என்ற கணக்கையும் போட்டுக் கொடுத்துள்ளார்களாம்.
அத்துடன், புதிய கட்சித் தலைவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் அது நமக்கு சாதகமாக இருக்கும்.. குறிப்பாக கேரளாவில் ஆட்சியை மீண்டும் பிடித்துவிடலாம் என்றும் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அவர்களது கணக்கை கூட்டிக் கழித்துப் பார்த்த கட்சியின் ‘பிரிய’மான மேலிட வாரிசு, இதுவும் சரியாகத்தான் படுகிறது… இந்த ரூட்டில் பயணித்துதான் பார்ப்போமே என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
இந்த புதிய டீல் பற்றி தனது தாய் மற்றும் சகோதரரிடம் பேசுவதாகவும் ‘பிரிய’மான வாரிசு கூறியிருக்கிறாராம்.. தற்போது கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேலிட இளம் தலைவர், அக்.10-ம் தேதி நாடு திரும்புகிறார்.. அதன்பிறகு டெல்லியில் அடுத்தடுத்த சில சந்திப்புகளும், அதிரடி முடிவுகளும் தமிழக அரசியல் களத்தை அதிரவிடும் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்!