குமுளி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐயப்பனை தரிசிப்பதற்காக வரும் 22-ம் தேதி சபரிமலை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தை முன்னிட்டும் நடை திறந்து 5 நாள் தொடர் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். வரும் அக்டோபர் 18-ம் தேதி துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்னிட்டு வரும் அக்.17-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இம்மாத வழிபாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு ஐயப்பனை தரிசிக்க உள்ளார்.
இவர் ஏற்கனவே மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. இதற்காக பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அப்போது நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போர்ச் சூழலால் அவர் சபரிமலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இம்மாதம் அவர் வர உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசன் கூறுகையில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலைக்கு வர உள்ளார். வரும் அக்.22-ம் தேதி கொச்சி விமான நிலையத்துக்கு வந்து, அதன் பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். தொடர்ந்து கார் மூலம் பம்பை வந்து அங்கிருந்து நீலி மலை பாதை வழியே நடந்து செல்ல உள்ளார். இருப்பினும் மாற்று ஏற்பாடாக வாகனம் மூலம் சன்னிதானம் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்நிலையில், பாதுகாப்பு கருதி அவர் வருகை குறித்த முழு விவரமும் தேவசம்போர்டுக்கு வரவில்லை. குடியரசுத் தலைவர் வரும் நாளில் பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தப்பட திட்டமிடப் பட்டுள்ளது. ஆனால் வரும் அக்.17-ம் தேதி மட்டுமே பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தரிசன முன்பதிவுகளை மேற்கொள்வதில் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.