சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, தொழிற் கல்வி பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களை முந்தைய அரசுகள் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி உள்ளது. அந்த அரசாணையை பின்பற்றி தற்போது பகுதிநேர ஆசிரியர்களாக அதே பாடங்களில் பணிபுரியும் அனைவரையும் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேலும் அரசின் பல்வேறு துறைகளிலும் பகுதிநேர பணியாளர்களாக தற்காலிகமாகவும், தொகுப்பூதியத்திலும், தினக்கூலி அடிப்படையிலும் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்கள், மணியகாரர், தலையாரி, எழுத்தர், நூலகர் என பலர் பின்னர் காலமுறை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் உள்ளது. இதுபோன்ற முன் உதாரணங்களை அரசாணைகளை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஆதாரங்களாக எடுத்துக்கொண்டு செயல்படுத்த வேண்டும்.
சம வேலை, சம ஊதியம் என்ற விதிப்படி ஒரே கல்வித் தகுதி உடைய ஒரே பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை ஒரே மாதிரியான சம்பளத்தில் பணி அமர்த்த வேண்டும். ஆனால் சிறப்பாசிரியர்களாக இதே பாடங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கப் படுகிறது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாகவும், மேலும் 2,500 ரூபாய் உதவித் தொகையாகவும் என இரண்டு முறையில் தனித்தனியாக இந்த பணம் வழங்கப்படுகிறது. இந்த பாரபட்சத்தை வேறுபாட்டை கலைந்து சம வேலை, சம ஊதியம் அமுல்படுத்தி அரசு சம நீதியை சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்.
தற்போது வழங்குகின்ற 12,500 ரூபாயை மொத்தமாக வழங்கக்கேட்டும் இதுவரை வழங்கவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் சம்பளம் தாமதம் ஆகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு சம்பளம் ”IFHRMS” முறையில் வழங்குவதுடன் இணைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும்.

2012ம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணி செய்கின்ற போதும் அரசின் சலுகைகள், பணப் பலன்கள் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் மே மாதம் சம்பளம், போனஸ், பண்டிகை கடன் போன்றவை ஒருமுறை கூட வழங்கவில்லை. அதுபோல மரணம் அடைந்த ஆசிரியர் குடும்பத்திற்கு நிவாரணம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பணிக் கொடை போன்றவையும் வழங்கவில்லை.
இதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாயை வைத்து கொண்டு இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்த முடியவில்லை. இதனால் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஏழாவது ஊதியக் குழுவில் பகுதிநேர தொகுப்பூதியத்தில் உள்ளவர்களுக்கும் 30 சதவீத சம்பள உயர்வு உண்டு என குறிப்பிட்டு இருந்தாலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை.
எட்டாவது ஊதியக் குழுவே அமுல் செய்ய உள்ள நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் அடிப்படை சம்பளத்துடன் கூடிய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தொகுப்பூதிய முறையை கைவிட்டு இனிமேல் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி என சிறப்பாசிரியர்களைப் போல காலமுறை சம்பளம் நிர்ணயித்து வழங்க வேண்டும்.
அப்படி செய்தால்தான் இனி அகவிலைப்படி உயர்த்தும் போது சம்பளம் உயரும். அதனுடன் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகள், பணப் பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு வழங்குகின்ற ”Pay Band Level 10-ன் படி ரூபாய் 20,600 என்ற அடிப்படை சம்பளத்தையே, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முறைப்படுத்தி வழங்க வேண்டும்.
பணிப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இதை தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்ய வேண்டும். பல லட்சம் மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காகவும், ஆசிரியர்களின் 14 ஆண்டு பணி அனுபவத்தையும் கருத்தில் கொண்டும், 12 ஆயிரம் பேர் குடும்ப நலன், எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இதை கல்வி சேவையாக செய்ய வேண்டும்.
பணி நிரந்தரம் செய்வதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்து இருப்பதால் அதற்கு அரசாணை வெளியிட வேண்டும். இதற்காக வருகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு கொள்கை முடிவு என பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து சிறப்பு ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும். எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது வைத்து இந்த கோரிக்கையை சட்டப்பேரவையில் இப்போது திமுக ஆட்சியில் மற்ற அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைக்கிறது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை இந்த சட்டப்பேரவை ஆட்சி காலத்திலேயே நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தான் முதல்வர் ஸ்டாலினுக்கு பெருமை சேர்க்கும். இல்லை என்றால் குறையாக குற்றச்சாட்டாக மாறும். திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பணி நிரந்தரம் நிறைவேற்ற கோரிக்கை நேரிலும் ஈ-மெயிலிலும் தபாலிலும் கொடுத்து வலியுறுத்தி வருகின்றோம்.
பல போராட்டங்களும் நடத்தி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் 53 மாதங்கள் முடிந்த பின்னரும் பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆட்சி இன்னும் ஏழு மாதங்கள் தான் உள்ளது. அதில் மார்ச், ஏப்ரல், மே 2 வரை 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் விதிகள் நடைமுறையில் இருக்கும் என்பதால் அப்போது எந்த அரசாணையும் பிறப்பிக்க இயலாது.
எனவே நடக்கின்ற அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையுள்ள இந்த ஐந்து மாதங்களுக்குள் போர்க்கால அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரவை கொள்கை முடிவாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்” என்று எஸ்.செந்தில்குமார் கூறியுள்ளார்.