புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6 அன்றும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11 அன்றும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து வெளியிட்டு வருகின்றனர். அதன்படி பிஹார் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 11-ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.18-ஆம் தேதியும், 2-ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்.21-ஆம் தேதியும் தொடங்குகிறது.
பிஹாரில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.50 கோடி பெண் வாக்காளர்களும், 3.92 கோடி ஆண் வாக்களர்களும், மூன்றாம் பாலினத்தவர் 1,725 வாக்காளர்களும் உள்ளனர். இதில் 14.1 லட்சம் முதன்முறை வாக்காளர்களாக உள்ளனர். பிஹாரில் மொத்தம் 90, 712 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் கிராமப்புறங்களில் 76,801 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புறங்களில் 13,911 வாக்குச்சாவடிகளும் உள்ளன.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, அம்மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், கடந்த தேர்தலில் பாஜக 80, ஐக்கிய ஜனதா தளம் 45, ஹெச்ஏஎம்(எஸ்) 4, 2 சுயேட்சைகள் என தேசிய ஜனநாயகக் கூட்டணி 131 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 77, காங்கிரஸ் 19, சிபிஐ (எம்எல்) 11, சிபிஐ(எம்) 2, சிபிஐ 2 என மகாகத்பந்தன் 111 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இம்முறையும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாகத்பந்தனுக்கும் இடையேதான் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.