‘பைசன்’ தான் தனது முதல் படமென்று துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். ’பைசன்’ படத்தின் முதல் அறிமுக விழா சென்னையில் உள்ள மாலில் நடைபெற்றது. அதில் துருவ் விக்ரம் கலந்துக் கொண்டு மக்கள் முன்பு பேசினார். அதில், “என் பெயர் துருவ். இதுவரை 2 படங்கள் நடித்துள்ளேன். அந்த 2 படங்களை பார்க்கவில்லை என்றாலும் பிரச்சினையில்லை. இந்தப் படத்தை கண்டிப்பாக நீங்கள் பார்க்கவேண்டும், ஏனென்றால் இது தான் என் முதல் படம். ’பைசன்’ படத்தை அப்படித்தான் நான் பார்க்கிறேன், நீங்களும் அப்படித்தான் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்.
இப்படத்துக்காக அனுபமா, ராஜிஷா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே பயங்கரமாக உழைத்திருக்கிறோம். அனைத்தையும் தாண்டி இந்தப் படத்துக்காக எனது 100% உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன்.
நீங்கள் திரையரங்கில் பார்க்கும் போது, அந்த உழைப்பு தெரிகிறதா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்துக்காக என்னையும் தாண்டி இயக்குநர் மாரி செல்வராஜ் கடுமையாக உழைத்து இறங்கி சம்பவம் பண்ணியிருக்கிறார். அந்தச் சம்பவம் உங்கள் அனைவரையும் ரொம்பவே ஊக்குவிக்கும்.
அக்டோபர் 17-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு அனைவரும் குடும்பத்துடன் போய் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார் துருவ் விக்ரம். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் பசுபதி, ராஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ளனர். அக்டோபர் 17-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழக உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருக்கிறார்.