சென்னை: தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006- 11ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த துரை முருகன், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
வேலூர் நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கை, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 2017ம் ஆண்டு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2019ம் ஆண்டு வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, தற்போது இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், தமிழக அரசு அக்டோபர் 23ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.