ஐசிசி தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அதிகப் போட்டிகளில் மோதுமாறு ‘ஏற்பாடு’ செய்வது கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார்.
ஒருபுறம் கைகுலுக்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், ஐசிசி ஆட்ட நடுவரை மன்னிப்புக் கேட்க வைப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், கோப்பையை நக்வியிடமிருந்து வாங்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், அவர்கள் என் கையில் தான் கோப்பையை வாங்க வேண்டும் என்று நக்வியும், போதாக்குறைக்கு இருதரப்பு வீரர்களிடத்தில் களத்தில் ஏற்பட்ட மோதல்கள், கோணங்கித் தனங்கள், அதிகப்பிரசங்கித் தனங்கள் போன்றவற்றைத் தாண்டி இந்தியா – பாகிஸ்தான் மூன்று முறை ஆசியக் கோப்பையில் மோதுமாறு போட்டித் தொடரை அமைக்கும் ‘ஏற்பாட்டை’ அனுமதிக்கக் கூடாது என்று மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு மைக்கேல் ஆத்தர்டன் கூறியதாவது: இந்திய – பாகிஸ்தான் அணிகள் இருதரப்புத் தொடர்களில் மோதுவதில்லை என்பதால் ஐசிசி தொடர்களில் இந்த அணிகள் மோதும் போட்டிக்கு கடும் பில்ட்-அப்கள் கொடுக்கப்படுகின்றன, இது பொருளாதாரப் பலன்களைப் பெறுவதற்காக இருக்கலாம். 2023 முதல் 2027 வரையிலான ஒலிபரப்பு உரிமைகள் 3 பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும்.
இருதரப்பு தொடர்கள் இல்லாததால் ஐசிசி தொடர்களில் இந்த அணிகளின் போட்டிகளுக்கு கிராக்கி உருவாக்கப்படுகிறது. ஆகவே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் ஐசிசியின் பேலன்ஸ் ஷீட்டைத் தீர்மானிக்கும் போட்டியாகும்.
ஒரு காலத்தில் அரசியல் செயலாட்சி நயத்திற்கான வழிமுறையாக இருந்தது கிரிக்கெட், ஆனால் இன்று தெளிவாக அது பரந்துபட்ட பதற்றங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான வழிமுறையாகி விட்டது. ஒரு தீவிர விளையாட்டு அதன் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான சிறு நியாயமும் இல்லை என்னும் போது இந்தப் பகைமை பிற நலன்களுக்கும், சுரண்டல்களுக்கும் பயன்படுத்துவதிலும் எந்த ஒரு துளி நியாயமுமில்லை.
அடுத்தடுத்த ஐசிசி நிகழ்வுகளுக்கான ஒளிபரப்பு உரிமை சுழற்சி வருவதற்கு முன் போட்டிகளின் ஷெட்யூல்கள் ‘முன் ஏற்பாடு’ என்பதாக இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு இருந்தால் நல்லது. ஒவ்வொரு முறையும் இந்த இரு அணிகளும் சந்தித்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. இரு அணிகளும் எதிர்த்து ஆட முடியவில்லை, சந்திக்க முடியவில்லை என்றால் அது அப்படியே ஆகட்டும். இவ்வாறு கூறியுள்ளார் மைக்கேல் ஆத்தர்டன்.