சென்னை: தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை புறந்தள்ளிவிட்டு திட்டமிட்டு அக்டோபர் 12-ல் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. தேர்வர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணராமல் தேர்வு வாரியம் பிடிவாதம் பிடிப்பது கண்டிக்கத்தக்கது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் கூறித்தான் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும் அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், எதையும் மதிக்காத தேர்வு வாரியம் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கும் எந்த போட்டித் தேர்வும் குறித்த தேதியில் நடைபெறுவதில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வுகளும், கல்லூரி உதவிப் பேராசியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான மாநிலத் தகுதித் தேர்வும் பல மாதங்கள் தாமதமாகத்தான் நடத்தப்பட்டன. கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 4 ஆயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை நடத்தப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கானத் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது.
எனவே, தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். தேர்வுகளில் விடைத்தாள்கள் மாறுவதைத் தவிர்க்க ஓ.எம்.ஆர் விடைத்தாள்களின் நகல்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும்; அது சாத்தியமில்லை என்றால், 2019 மற்றும் 2022 ஆண்டுகளில் நடைபெற்றது போல CBT (Computer Based Test) முறையில் இத்தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.