புதுடெல்லி: கடந்த ஜூலை 23, 24 தேதிகளில் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது இப்போது 56 பில்லியன் டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்தியா வருமாறு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாரமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கீர் ஸ்டார்மர், 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 8-ம் தேதி இந்தியா வருகிறார். கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், 9-ம் தேதி பிரதமர் மோடியை மும்பையில் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, விஷன் 2035 என்ற 10 ஆண்டு திட்டத்தின் மூலம் இந்தியா-இங்கிலாந்து இடையே ஏற்பட்ட கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை, ராணுவம், பாதுகாப்பு, காலநிலை, எரிசக்தி, சுகாதாரம், கல்வி, இருதரப்பு மக்கள் இடையிலான உறவு ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் விஷன் 2035 திட்டம்.
முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாட உள்ளனர். மேலும் வரும் 9-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள 6-வது சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில் இரு தலைவர்களும் சிறப்புரையாற்ற உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.