ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் நடிப்பைப் பார்த்து வியந்த தமிழ் சினிமா, குணச்சித்திர நடிகர்களையும் கொண்டாடியே வந்திருக்கிறது. டி.எஸ்.பாலையா, ரங்காராவ், எஸ்.வி.சுப்பையாவில் இருந்து பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில், எம்.எஸ்.பாஸ்கர் தவிர்க்க முடியாத நடிகர்.
நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட எதைக் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிற கலை, சிலருக்கு மட்டும் சாத்தியம். அதில் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படி மேலே! சமீபத்தில் தேசிய விருது வாங்கியிருக்கும் அவர், ‘இந்து தமிழ் திசை’ வாசகர்களுக்காகத் தனது அனுபவங்களைத் தொடராக எழுதுகிறார்.
முதல் சம்பளம்: சினிமா ஆசை, எல்லோரையும் போல எனக்கும் சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இதற்கு றெக்கை தந்து பறக்க வைத்தது பள்ளியில் நான் நடித்த நாடகங்கள். நாகப்பட்டினத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, மாரியப்பன் என்ற ஆசிரியர் நாடகங்களை எழுதுவார். அவர் எழுதும் நாடகங்களில் நிச்சயமாக எனக்கொரு ஒரு கதாபாத்திரம் உண்டு, அதோடு யாரைப் பார்த்தாலும் அவர்களைப் போல, அவர்கள் மேனரிசங்களை அப்படியே செய்யும் ஆற்றல் எனக்கு இயல்பாகவே இருந்தது. என் சினிமா பயணத்துக்கு, அது தொடர்பான என் ஆர்வத்துக்கு, அந்த ஆசைக்கு விழுந்த முதல் விதை அதுதான்.
என் அப்பா – அம்மாவுக்குச் சொந்த ஊர் முத்துப்பேட்டை அருகிலுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு. நான் பிறந்தது நாகப்பட்டினம் அருகிலுள்ள காடம்பாடியில், வளர்ந்தது வெளிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள 11-ம் நம்பர் வீடு. அங்கிருந்த எங்கள் வீட்டின் பெயர் ‘பாஸ்கர பவனம்’.
என் பெயரைத்தான் அந்த வீட்டுக்கு ஆசையாக வைத்தார் என் அப்பா. நாங்கள் அந்த வீட்டை விற்றுவிட்டாலும் இப்போதும் அதே பெயருடன் அந்த வீடு அங்கே இருக்கிறது.
அங்குள்ள தேசிய பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். அப்போது டி.கே.சண்முகம், பகவதி அண்ணாச்சி குழுவினரின் நாடகம் ஒவ்வொரு ஊராக நடக்கும். எங்கள் ஊருக்கும் நாடகம் நடத்த வருவார்கள். என் அப்பாவுக்கு அவர்கள் நல்ல பழக்கம்.
ஒருமுறை அவர்கள் ‘ராஜராஜ சோழன்’ நாடகம் போடும்போது, வழக்கமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகை வரவில்லை. அப்போது, என் அக்கா ஹேமமாலினியை நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். காலையில் வசனங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அதை நன்றாக மனப்பாடம் செய்து மாலையில் நடந்த நாடகத்தில் சிறப்பாக நடித்தார் என் சகோதரி. ஏகப்பட்டப் பாராட்டுகள்.
இதைக் கண்டதும் “இவ்வளவு திறமையை வச்சுக்கிட்டு இங்க ஏன் இருக்கணும்? சென்னைக்கு வாங்க…” என்று சண்முகம் அண்ணாச்சி சொன்னார். அவர் அழைப்பின் பேரில் நாங்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். ராயப்பேட்டையில் தொடங்கியது எங்கள் சென்னை வாழ்க்கை.
நான் கோபாலபுரம் பள்ளியில் சேர்ந்தேன். பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பியூசி, பி.காம் படித்தேன். படிப்பில் நான் சிறந்த மாணவன் இல்லை. கல்லூரி படிக்கும் போது முரட்டுச் சுபாவம் கொண்டவனாக இருந்தேன். யாருக்கும் அடங்காதவனாக, ரவுடி போல அலைந்து கொண்டிருந்தேன். அடிக்கடி தகராறில் ஈடுபடுவேன். அதிகாலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்து தூங்குவேன். அந்த வயதில் என் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. ஆனால், இப்போது அடிக்கடி அதை நினைத்து, ‘இப்படிலாமா இருந்திருக்கோம்?’ என்று நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன்.
கல்லூரியை முடித்து வெளியே வந்த போதுதான், வாழ்க்கை என் முன்னே பெரிய பயத்தை நிறுத்தி வைத்திருந்தது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலையும் பயமும் வந்து சேர்ந்தது. பயம் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா பார்ப்பதை மட்டும் விடவில்லை. அப்போது கையில் பணம் இருக்காது. பழைய பேப்பர்களைச் சேகரித்து, அதை விற்று ரூ.2.90 பைசா சேர்ந்ததும், உடனடியாக சினிமாவுக்கு போய்விடுவேன்.
நாகப்பட்டினத்தில் இருக்கும்போதும் அப்படித்தான். அங்கு ஸ்டார், பாண்டியன் என இரண்டு தியேட்டர்கள் இருந்தன. பெஞ்ச் டிக்கெட் 30 காசு; தரை டிக்கெட் 10, 15 காசுதான். என் பாட்டியிடம் அதாவது அம்மாவின் அம்மாவிடம் பிடிவாதம் பிடித்து காசு வாங்கி படம் பார்ப்போம். அப்போது தியேட்டர்களில் திரை ‘ஓபனாக’த்தான் இருக்கும். பின்னால் நின்று கொண்டுதான் நடிகர்கள் நடிக்கிறார்கள் என நினைத்த காலம் அது. திரைக்குப் பின்னால் ஆர்வமாக ஓடி நடிகர்கள் இருக்கிறார்களா என்றும் பார்ப்போம். அது அறியாத பருவம்!
சென்னையில் அக்கா, நடிப்புக்கு முயற்சி செய்தார். அப்போது நடிகர் செந்தாமரை எங்களுக்குப் பழக்கமானார். அவர் எனக்கு அப்பா மாதிரி. அவர்தான் உதய பாஸ்கரன் என்ற என் பெயரை எம்.எஸ்.பாஸ்கர் என்று மாற்றி வைத்தார். அவர், என் சகோதரியிடம் “உனக்கு நடிப்பு வேண்டாம். உன் குரல் நன்றாக இருக்கிறது. டப்பிங் பேசு” என்று சிட்டுக்குருவி படத்தில் பேச வைத்தார். அந்தப் படத்தில் சிவகுமார், சுமித்ரா, மீரா என பலர் நடித்திருந்தார்கள். நடிகை மீராவுக்கு என் சகோதரி குரல் கொடுத்தார். பிறகு சில்க் ஸ்மிதா உள்பட பலருக்கு குரல் கொடுத்திருக்கிறார். அக்காவுக்குத் துணையாக நான் டப்பிங் தியேட்டருக்கு செல்வேன்.
அப்போது வீனஸ் ஸ்டூடியோவில் ‘சிட்டுக்குருவி’ பட டப்பிங். தேவராஜ் மோகன் இயக்குநர். வழக்கமாக வரும் ஒரு டப்பிங் கலைஞர் அன்று வரவில்லை. வேந்தன்பட்டி அழகப்பன் (‘தங்கமான ராசா’ பட இயக்குநர்) அதில் அசோசியேட்டாக பணியாற்றினார். என்னை அழைத்து, “இங்க வாடா, இதை பேசுறியா?” என்று ஒரு வசனப் பேப்பரை கொடுத்தார். சரி என்று வாங்கினேன்.
அவர், “மானிட்டர் பார்க்கிறேன்” என்றார். “வேண்டாம். சரியா பேசிருவேன். டேக் போகலாம்” என்றேன். அப்போது கம்ப்யூட்டர் கிடையாது. அதை லூப் சிஸ்டம் என்பார்கள். காட்சியை போட்டார்கள். நான் ஒரே டேக்கில் பேசிவிட்டேன். அவருக்கு ஆச்சரியம். “என்னடா, ஒரே டேக்கில் பேசிட்டே?” என்று கேட்டார் அவர். “உள்ளே இருந்து ஒவ்வொருவரும் பேசுவதை, மனதுக்குள் பேசிப் பேசி பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு எளிதாக வந்துவிட்டது” என்றேன். என்னைத் தட்டிக் கொடுத்தார்.
முடிந்ததும், “சரி, நான் கிளம்பறேன்” என்றேன். அவர், “முதன் முதலா டப்பிங் பேசியிருக்கே. சும்மா போகக் கூடாது” என்று இரண்டு பத்து ரூபாய்களையும் ஒரு 5 ரூபாயையும் கொடுத்தார். அந்த 25 ரூபாய்தான் நான் உழைத்து வாங்கிய முதல் சம்பளம்.
(திங்கள் தோறும் பேசுவோம்)