மதுரை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வதை கட்டாயப்படுத்தி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காகிதப் பயன்பாட்டை குறைக்க இணையவழி மனு தாக்கல் முறை ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
இம்முறையில் வழக்கு தொடர்பான மனுக்கள் மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்து, நீதிமன்ற வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்து அனுப்பவேண்டும். இந்த முறையை பின்பற்றுவதில் சில சிரமங்கள் எழுந்ததால், உயர் நீதிமன்றத்தில் இணையவழி மனு தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் அக். 8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு உயர் நீதிமன்றத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புள்ளியியல் துறை பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட நீதிமன்றங்களில் அக்டோபர் 8 முதல் அனைத்து வழக்குகளுக்கும் இணையவழி மனு தாக்கல் கட்டாயப்படுத்தப்படுகிறது.
இந்த வசதி தொடர்பாக, வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அலுவலகங்களுக்கு நேரில் வந்து மனு தாக்கல் செய்யுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. இணையவழி மனு தாக்கல் முறையை பின்பற்றுவதில் ஏதாவது சிரமம் இருந்தால், மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையங்களின் உதவியைப் பெறலாம்.
இணையவழியில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தாமதம் இல்லாமல் ஆய்வு செய்ய அனைத்து நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: இணையவழி மனு தாக்கல் முறையில், மனுக்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், மனுக்களின் நகலை நேரடியாகவும் வழங்க வேண்டும். தற்போது, பொருளாதாரம் தொடர்பான வழக்குகள், சமரசத் தீர்வு வழக்குகள், ஜாமீன் மனுக்கள் இணையவழியில் தாக்கல் செய்யப்படுகின்றன.
கடந்த ஓராண்டாக இணையவழி மனு தாக்கல் செய்ய பயிற்சி பெறுமாறு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதனால், இம்முறையை பின்பற்றுவதில் அதிக சிரமம் ஏற்படாது. செல்போன் வழியாகவே மனுக்களை ஸ்கேன் செய்யும் வசதியுள்ளது. இவற்றை பயன்படுத்தி மனுக்களை இணையவழியில் விரைவில் தாக்கல் செய்யமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.